விளைநிலங்களில் புகுந்த மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின
விளைநிலங்களில் புகுந்த மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
பெரம்பலூர்:
நெற்பயிர்கள் மூழ்கின
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விசுவக்குடி, கொட்டரை ஆகிய நீர்த்தேக்கங்களும், 10 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வடகிழக்கு பருவமழையினால் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு காளிங்கராயநல்லூர், அகரம் சீகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இனாம் அகரம் பகுதியிலும் விவசாய விளை நிலங்களில் மழைநீர் புகுந்ததால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்ணீரில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நேற்று மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின்பேரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நேற்று திறக்கப்பட இருந்த தனியார் பள்ளிகள் திறக்கப்படாததால் பள்ளிக்கு செல்ல ஆர்வத்துடன் இருந்த மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று பகல் நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது.
சாலையில் தேங்கிய மழைநீர்
பெரம்பலூரில் பெய்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள வெங்கடாஜபதி நகரில் இருந்து தலையாட்டி சித்தர் ஆசிரமம் வழியாக எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ் நகர் மற்றும் ரோஸ் நகர் விரிவாக்கப் பகுதிகளை இணைக்கும் சாலையில் மழைநீர் தேங்கி, அப்பகுதி தீவுபோல் ஆகியுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களும், அந்த வழியே இருசக்கர வாகனங்களில் சென்றுவரும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் தில்லைநகர் அருகே குறிஞ்சி நகர்- முல்லைநகர் இடையே உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. தொடர் மழை காரணமாக இப்பகுதியில் மழைநீர் சாலைகளில் சூழ்ந்துள்ளதால் குறிஞ்சிநகர், முல்லைநகர் மக்கள் பிரதான சாலைக்கு வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மழைநீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து, சாலையை மேம்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-10, பாடாலூர்-2, அகரம்சீகூர்-16, லெப்பைக்குடிகாடு-13, புதுவேட்டக்குடி-4, பெரம்பலூர்-8, எறையூர்-10, கிருஷ்ணாபுரம்-6, தழுதாழை-22, வி.களத்தூர்-8, வேப்பந்தட்டை-20.