குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா

குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா 11-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 13-ந் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-08 20:48 GMT
சோழவந்தான், 
குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா 11-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 13-ந் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குருபகவான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்பு வாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். 
ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு இங்கு 3 நாட்கள் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி வியாழக்கிழமை 10.45 அளவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது.
அனுமதி இல்லை
 13-ந் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்கி 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 
இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி குருபெயர்ச்சி விழாவின் போது 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாடு
குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்