பள்ளி மாணவியை கொன்ற கணவர் கைது - அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி குழந்தை திருமணம் செய்ததும் அம்பலம்

துமகூரு அருகே பள்ளி மாணவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தும் மாணவியை அவர் குழந்தை திருமணம் செய்திருந்தது அம்பலமாகி உள்ளது.;

Update: 2021-11-08 20:29 GMT
பெங்களூரு:

மாணவியுடன் திருமணம்

  துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே அவலயன பாளையா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவர், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். லட்சுமிபதி மனைவிக்கு 16 வயது தான் ஆகிறது. தனது சகோதரியின் மகளை தான் அவர் திருமணம் செய்திருந்தார். அந்த சிறுமி பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.
  கடந்த ஆண்டு (2020) சிறுமியை திருமணம் செய்ய லட்சுமிபதி முயன்றார். இதுபற்றி அறிந்த அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்பு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார்கள்.

  மேலும் 18 வயது நிரம்பும் முன்பாக சிறுமியை திருமணம் செய்ய கூடாது என்று லட்சுமிபதியையும் எச்சரித்திருந்தனர். அத்துடன் சிறுமியின் பெற்றோர், லட்சுமிபதியிடம் அதிகாரிகள் எழுதியும் வாங்கி சென்றிருந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே சிறுமியை திருமணம் செய்து லட்சுமிபதி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கொலை

  இதற்கிடையில், கடந்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

  அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் சிறுமியின் கழுத்தை நெரித்து லட்சுமிபதி கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட லட்சுமிபதியை தேடிவந்தனர்.

கணவர் கைது

  இந்த நிலையில், லட்சுமிபதியை கொரட்டகெரே போலீசார் கைது செய்துள்ளனர். கணவன், மனைவி இடையே நடந்த சாதாரண குடும்ப பிரச்சினையில் ஆத்திரத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தது தெரியவந்தது.

  அதே நேரத்தில் 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ததற்காக லட்சுமிபதி மீதும், சிறுமியின் பெற்றோர் மீதும் கொரட்டகெரே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்