பிட்காயின் முறைகேடு ஆவணங்கள் இருந்தால் காங்கிரஸ் வெளியிட வேண்டும் - போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திவிட்டு பிட்காயின் முறைகேடு குறித்த ஆவணங்கள் இருந்தால் காங்கிரஸ் வெளியிட வேண்டும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-08 20:27 GMT
பெங்களூரு:

காங்கிரஸ் குற்றச்சாட்டு

  கர்நாடகத்தில் நடந்த பல கோடி ரூபாய் பிட்காயின் முறைகேடு வழக்கில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் பிட்காயின் முறைகேடு தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறுவதால், அதற்கான விசாரணை நகலை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

  இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஆவணங்களை வெளியிட வேண்டும்

  பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

  இது சரியானது இல்லை. இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திவிட்டு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் இருந்தால், அவற்றை காங்கிரஸ் வெளியிட வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

  பிட்காயின் விவகாரத்தில் எந்த தகவலையும் மூடி மறைக்க அரசு முயற்சிக்கவில்லை. யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் போலீசார் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். பழைய வழக்கை தாமதமாக விசாரணை நடத்துவது ஏன்? என்பது குறித்து ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துள்ளேன்.
  இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்