ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு
திருச்சியில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டருக்கு அப்பால், ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தஞ்சாவூரில் இருந்து கோவை சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர் வெள்ளை-சிவப்பு நிறமுடைய டி-ஷர்ட்டும், பிரவுன் கலர் டவுசரும், கழுத்தில் கருப்பு கயிறும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மற்றொருவர் சாவு
இதேபோல, திருச்சி ஓயாமரி காவிரி பாலத்தின் கீழ் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் நீல நிற கட்டம் போட்ட லுங்கியும், வெள்ளை நிற பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.