குடிநீர் குழாயை சூழ்ந்த கழிவுநீர்
தஞ்சை 29-வது வார்டு ரொட்டிக்கடை தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது குடிநீர் குழாயை மழைநீர் மற்றும் கழிவுநீர் சூழ்ந்து உள்ளன. இதன் காரணமாக குடிநீர் குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாய் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். பொதுமக்கள் தஞ்சாவூர்.
குப்பைத்தொட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள சாலை நடுவே குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குப்பைத்தொட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி நடுத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்தேக்கத்தொட்டியை சுற்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடிநீர் எடுக்க செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். கோபி ஆலக்குடி
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வடகரை பகுதியில் உள்ள குளம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளம் நிறையத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் குளத்தின் கரை பராமரிப்பின்றி உள்ளதால் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறி செல்கிறது. மேலும், குளம் தூர்வாரப்படாமல் உள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி குளத்தின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவேந்திரன் வடகரை