மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்

மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்;

Update: 2021-11-08 19:47 GMT
சேலம், நவ.9-
சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
குறைதீர்க்கும் முகாம்
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
இதில் ஓய்வூதியம், பணி நியமனம், சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கண்காணிப்பு பணிகள்
தொடர்ந்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் பேசும் போது, தற்போது பருவமழை காலமாக உள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகர் பகுதியில், சாலைகளில் மழை நீர் தேங்காமலும், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகாமலும் இருக்க மாநகராட்சி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாத வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்