கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம்

கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம்

Update: 2021-11-08 19:47 GMT
சேலம், நவ.9-
இல்லம் தேடி கல்வித்திட்ட கலைநிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாட்டுப்புற கலைஞர்கள்
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடத்தி எளிமையான முறையில் மாணவர்களுக்கும், மக்களுக்கும் சென்றடைய ஏதுவாகவும் இருக்கும். ஆனால் இத்திட்டத்தை கலையே தெரியாத இடைத்தரகர்கள் மூலம் உபயோகப்படுத்துவதால் நாட்டுப்புற கலைஞர்களின் உழைப்பை உறிஞ்சி அவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்.
எனவே, நாட்டுப்புற கலைஞர்களை இயல் இசை நாடக மன்றம், மண்டல கலைப்பண்பாட்டுத்துறை, மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பாக கலைஞர்களை அடையாளப்படுத்தி கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்ற கலைஞர்களை கொண்டு இத்திட்டத்தை நடத்த வேண்டும். அப்போது தான் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, மாவட்டம் தோறும் அரசு பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் நலசங்கம் சார்பாக இத்திட்டத்தை செயல்படுத்தி உண்மையான கலைஞர்களை வாழ வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனிமி படத்துக்கு தடை
இதேபோல், பிஸ்மில்லா மக்கள் கட்சி நிறுவனர் வக்கீல் அகமது ஷாஜஹான் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் நடித்த எனிமி திரைப்படத்தில் சிறுமிகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை கடத்தி துன்புறுத்துவது, வன்முறையை தூண்டி சட்ட விரோதமான செயல்கள் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த படம் தொடர்ந்து தியேட்டரில் ஒளிபரப்பினால் சிறுமிகள் பாலியல் வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, எனிமி படத்துக்கு தடைவிதிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்