சேலம், நவ.9-
சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சாரல் மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
விடிய, விடிய மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழையானது நேற்று காலையிலும் நீடித்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவித்தார்.
பொதுமக்கள் அவதி
சேலம் கடைவீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, கலெக்டர் அலுவலகம், பால் மார்க்கெட், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் காலை முதல் மாலை வரையிலும் சாரல் மழை இடை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
இதனால் வீடுகளில் இருந்து பல்வேறு தேவைகளுக்கான வெளியில் சென்ற பொதுமக்களும், மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்து கடும் அவதிக்குள்ளாகினர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலர் குடைகளை பிடித்தவாறும், மழை கோட்டுகளை அணிந்தவாறும் சென்றதை காணமுடிந்தது.
வீடுகளில் முடங்கினர்
சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகள் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டுகளிலும் நேற்று காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டது. சேலத்தில் பெய்த தொடர் மழையால் திருமணி முத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.
சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், மேச்சேரி, ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, சேலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:- பெத்தநாயக்கன்பாளையம்-38, ஆத்தூர்-22, கெங்கவல்லி-20, வீரகனூர்-17, ஆனைமடுவு-16, ஏற்காடு-12, கரியகோவில்-12, காடையாம்பட்டி-7, தம்மம்பட்டி-6, சேலம்-2.4, ஓமலூர்-2, மேட்டூர்-1.2, எடப்பாடி-1.