ராஜபாளையம்
ராஜபாளையத்தில் பட்டப்பகலில் பெட்டிக்கடையில் புகுந்து பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி இந்திராணி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கணேசன் அதே தெருவில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கணேசன் சென்று விட்டார். இதனால் இந்திராணி கடையில் இருந்துள்ளார்.
பகல் 11 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பெட்டிக்கடைக்கு வந்துள்ளார். பின்னர் திடீரென கடைக்குள் புகுந்த அந்த நபர் இந்திராணியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கடைக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே சந்தைக்கு சென்றிருந்த கணேசன் தனது மனைவியின் செல்போனுக்கு ெதாடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து தனது பெட்டிக்கடைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடைக்குள் சென்று பார்த்த போது இந்திராணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கணேசனுக்கும், ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்திராணியின் உடலை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.