வயலில் இறங்கி மழையால் சேதமான நெற்பயிரை பார்வையிட்ட கலெக்டர்

மானாமதுரை பகுதியில் வயலில் இறங்கி மழையால் சேதமான நெற்பயிரை கலெக்டர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

Update: 2021-11-08 19:16 GMT
மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் வயலில் இறங்கி மழையால் சேதமான நெற்பயிரை கலெக்டர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

மழையால் நெற்பயிர் சேதம்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழை காரணமாக மானாமதுரை பகுதியில் உள்ள நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளன. இது குறித்து தினத்தந்தியில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர், பறையன்குளம், செய்யலூர், சன்னதிபுதுக்குளம் பகுதியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

 செய்களத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட கண்மாய் கரையோரம் வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். அங்குள்ள வயல்வெளியில் இறங்கி நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்த்தார். அப்போது விவசாயிகள் வயலில் இறங்கி மழைநீர் தங்கள் முழங்கால் அளவு நிற்பதையும், மழையால் நெற்பயிர் அழுகி நாசமானதையும் தங்கள் கைகளில் எடுத்து காண்பித்தனர்.
அதன்பிறகு சன்னதிபுதுக்குளம், செய்யலூர் ஆகிய பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தார். மழையால் சேதமான பயிர்களை வருவாய்த்துறை மூலம் கணக்கெடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். விவசாய விளைநிலங்களில் உள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் பறையன்குளம் உயர்நிலைப்பள்ளி வளாகம் முன்பு தேங்கி இருந்த தண்ணீரை அவர் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறும் போது, சமீபத்தில் பெய்த மழையால் சேதமான நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளேன். வருவாய்த்துறையினர் வழங்கும் பாதிக்கப்பட்ட விவரம் அரசுக்கு அனுப்பி நிவாரண தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வில் தாசில்தார் தமிழரசன், மானாமதுரை ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, மலைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி பெரியசாமி, சின்னகன்னூர் ஊராட்சி தலைவர் அங்குசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கலெக்டர் நேரில் வந்து ஆய்வு நடத்தியதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தினத்தந்திக்கும், கலெக்டருக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்