ஊராட்சி தலைவியை பதவி நீக்கக்கோரி கலெக்டரிடம் மகள் மனு
பொய்யான தகவல்களை கூறி தேர்தலில் வெற்றியா? ஊராட்சி தலைவியை பதவி நீக்கக்கோரி கலெக்டரிடம் மகள் மனு கொடுத்து உள்ளார்.
ராமநாதபுரம்,
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரியும் கயல்விழி நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத்திடம் ஒரு மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தாயார் மல்லிகா (வயது 60) கமுதி அருகே உள்ள சடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தேர்தலின்போது மனு தாக்கல் செய்த ஆவணங்களில் தன்னுடைய கல்வித்தகுதி, சொத்து மதிப்பு, வருவாய் போன்றவை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார். உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பதவி வகிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய காரணத்திற்காக அவரை பதவி நீக்கம் செய்வதோடு சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஊராட்சி மன்ற தலைவியான தன்னுடைய தாயாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மகளே கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.