குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்

குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-08 18:31 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணை நிரம்பியதால் அந்த அணை தண்ணீர் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது இதனால் குடியாத்தம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகிறது.

குடியாத்தம் அருகே அக்ராவரம் ஏரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக நிரம்பியது. இதில் நிரம்பி வழியும் தண்ணீர் பட்டறை கால்வாய் மூலம் கவுண்டன்ய மகாநதி ஆற்றுக்கு செல்லும். தற்போது அந்த ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அந்த கால்வாய் தண்ணீர் அக்ராவரம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கும், வீடுகளுக்கும் புகுந்தது.
 
விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை மற்றும் கரும்பு வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பல ஏக்கர் விளைநிலம் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. அதேபோல் இந்த தண்ணீர் அக்ராவரம் அண்ணா நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

 இதையடுத்து தண்ணீரை வெளியேற்ற கோரியும் கால்வாயை உடைப்பை உடனடியாக சீரமைக்கக் கோரியும் அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம்-சேம்பள்ளி சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் ஒரு அடிக்கும் மேல் ஏரி கால்வாய் தண்ணீர் சென்று கொண்டிருந்தபோதும் சாலை மறியல் தொடர்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, அக்ராவரம் ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் செல்ல வழிவகை செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

பொக்லைன் மூலம்...

இதனைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கொண்டு வரப்பட்டு ஏரி கால்வாய் தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கலக்க வழி செய்யப்பட்டது.
தொடர்ந்து நிரந்தர தீர்வு காணும் பொருட்டு சாலையில் 2 பெரிய ராட்சத சிமெண்டு குழாய்கள் புதைக்கப்பட்ட து. தண்ணீர் அந்த குழாய்கள் வழியாக கவுண்டன்ய மகாநதி ஆற்றுக்கு செல்லும் வகையில் வழி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்