அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு எல்லைக் காவல் தெய்வங்கள் உற்சவ நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 23-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர மற்ற விழா நாட்களில் உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் தினசரி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி சீட்டு
வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என்றும், உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் அனுமதி சீட்டு மற்றும் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்தனர்.
அனுமதி சீட்டு இல்லாதவர்களை போலீசார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். அனுமதிச் சீட்டு இல்லாதவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
வெறிச்சோடியது
இதனால் கோவில் வளாகத்துக்குள் பக்தர்கள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனுமதிச்சீட்டு இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி சாமி தரிசனத்திற்கு இ- பாஸ் பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.