ராமநாதபுரத்தில் பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு தாமதமாக விடுமுறை அறிவித்ததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2021-11-08 18:22 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு தாமதமாக விடுமுறை அறிவித்ததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இடைவிடாது பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று காலை வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலையும் நல்ல மழை பெய்தது. இதேபோல் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று அதிகாலை முதல் காலை 9 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மழையிலும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க இருந்த நிலையில் கல்வித்துறையின் சார்பில் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள மழை சூழ்நிலைக்கு ஏற்றவாறு விடுமுறை விடுவதா, பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதா என முடிவெடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள், பெற்றோர்கள் அவதி

இதன்படி ஒரு சில அரசு பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மற்ற பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்றன. விடாத மழையிலும் மாணவ-மாணவிகள் சொல்ல முடியாத அவதியுடன் பள்ளிகளுக்கு நனைந்தபடி வந்து கொண்டிருந்தனர். விடுமுறையா இல்லையா என்று உறுதியாக அறிவிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் குழப்பம் அடைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்த வேளையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து வகுப்புகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதனால் கொட்டும் மழையில் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு சென்று தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்தனர். மழையில் நனைந்தபடி மாணவர்கள் வீடுகளுக்கு சென்றனர். கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னுக்கு பின் முரணான அறிவிப்பால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் அவதி அடைந்தனர். 
மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வடகிழக்கு பருவமழை நீடிக்கும் நிலையிலும் பள்ளிகள் திறப்பு குறித்து முறையான அறிவிப்பினை காலையிலேயே தெரிவிக்கவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடல் சீற்றம்

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் பாம்பன் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது.குறிப்பாக ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. புதிய ரெயில் பால பணிகளுக்காக கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மிதவை மற்றும் உபகரணங்கள் மீதும் கடல் அலைகள் மோதி பல அடி உயரத்திற்கு மேல் நோக்கி சீறி எழுந்தன.

மழையளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- 
ராமநாதபுரம்-11.4, மண்டபம்-22, ராமேசுவரம்-18.6, பாம்பன்-35.2, தங்கச்சிமடம்-43.3, பள்ளமோர்குளம்-13, தீர்த்தாண்டதானம்-3, ஆர்.எஸ்.மங்கலம்-34.5, பரமக்குடி-2, முதுகுளத்தூர்-6, கமுதி-3.2, கடலாடி-3, வாலிநோக்கம்-7.6, மொத்தம்-202.8, சராசரி-12.68.

மேலும் செய்திகள்