‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
பராமரிப்பு இல்லாத நல்லாகுளம்
நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தர்பார்நகர் பகுதியில் நல்லாகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரைப்பகுதியை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பேவர் பிளாக் கற்கள் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும் வயதானவர்கள் அமருவதற்காக இருக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. நடைபாதை முழுவதும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பு, நத்தம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 2-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி அருகே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதுபாலன், பழைய ஆயக்குடி.
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி 4-வது வார்டில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலையில் உள்ள குழிகளை சமன்படுத்தும்பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை பணியை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிவாசு, முள்ளிப்பாடி.
குடிநீர் கிடைக்காமல் அவதி
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 8-வது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நீண்ட தூரத்தில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை உள்ளது. எனவே உடனடியாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை.