வானூர் அருகே 2 வீடுகளில் ரூ.10 லட்சம் நகை பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வானூர் அருகே 2 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-08 17:29 GMT
விழுப்புரம், 

20 பவுன் நகை கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த எறையானூர் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் தென்ஆப்பிரிக்காவில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கல்பனா (42) தனது தாய் பாலாமணியுடன் (63) வசித்து வருகிறார்.
இந்நிலையில் கல்பனாவும், அவரது தாய் பாலாமணியும் கடந்த 6-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு தேனியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.7 லட்சமாகும்.

மற்றொரு வீட்டில்...

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சம்பத்குமார் (63) என்பவர் கடந்த 7-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை எறையானூருக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.44 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. 
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கல்பனா, சம்பத்குமார் ஆகிய இருவரும் தனித்தனியாக கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்