‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-08 16:46 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் எம்.சரவணன். இவர், தச்சநல்லூர் மண்டலம் 2-வது வார்டுக்கு உட்பட்ட மங்களா குடியிருப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை என ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இந்த புகாருக்கு உடனடி தீர்வாக தற்போது அங்கு தெருவிளக்கு எரிகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

சாலையை ஆக்கிரமித்துள்ள மாடுகள்

பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகர், திருநகரில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. சாைலயை ஆக்கிரமித்தபடி போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாடுகளை பிடித்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஜான் வின்ஸ்லின், திருமால்நகர்.

மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?

பணகுடி யாதவர் மேலத்தெருவில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கா.முருகன், பணகுடி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி;
அடிபம்பு சரி செய்யப்பட்டது

தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் மு.சித்ரா. இவர், அங்குள்ள கிணற்றடி தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அப்படியே கிடப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது அடிபம்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

குண்டும், குழியுமான சாலை

புளியங்குடி பஸ் நிலையத்தில் இருந்து மேலமந்தை செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடியை சேர்ந்தவர் மருத பெருமாள். இவர், 3-வது மைல் புதுக்குடி 2-வது தெருவில் சிமெண்டு சாலை நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் எல்.இ.டி. மின்விளக்கு எரியவில்லை என ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. புகாருக்கு உடனடி தீர்வாக மின்விளக்கு எரிகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

நோய் பரவும் அபாயம்

தென்திருப்பேரை நகரப்பஞ்சாயத்து வார்டு எண்- 3-ல் உள்ள யாதவர் தெருவில் அமைந்துள்ள திருவரங்கசெல்வி அம்மன் கோவில் செல்லும் சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இ.இசக்கியம்மாள், தென்திருப்பேரை.

தேங்கி கிடக்கும் மழைநீர்

தூத்துக்குடி போல்டன்புரம் ராமசாமிபுரம் தொடர்ச்சி தெருவில் உள்ள வாறுகாலில் உடைப்பு ஏற்பட்டு மழைநீரோடு, சாக்கடை நீரும் கலந்து கடந்த ஒரு வாரமாக அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இதனை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தர்யா, தூத்துக்குடி.

மேலும் செய்திகள்