உடுமலை உழவர் சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அகற்றப்படுமா
உடுமலை உழவர் சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அகற்றப்படுமா
தளி,
உடுமலை உழவர் சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அகற்றப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை சுற்று வட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். விவசாயிகள் தென்னை, வாழை, சப்போட்டா, மா போன்ற நீண்டகால பயிர்களையும் கீரைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற குறுகிய கால பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். விற்பனைக்கு தயாரான காய்கறிகளை உடுமலையில் உள்ள தினசரி சந்தை மற்றும் உழவர் சந்தை நாள்தோறும் கொண்டு வருகின்றனர். தினசரி சந்தையில் ஏலம் மூலமாகவும் உழவர்சந்தையில் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் உழவர் சந்தையில் காய்கறிகள், கீரை வகைகள் தினசரி சந்தையை விடவும் விலை குறைவாகவும், புத்தம் புதியதாகவும் இருக்கும் என்பதால் உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் அங்கு வந்து செல்கின்றனர். அப்போது சந்தைக்கு முன்பு சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்த வழியாக செல்கின்ற வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
குவிந்து கிடக்கும் காய்கறிக்கழிவுகள்
அதுமட்டுமின்றி சந்தை வளாகத்தின் நுழைவு பகுதியில் காய்கறிகள் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு குவிந்துகிடக்கிறது. அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழையின் காரணமாக அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் அந்தப்பகுதியில் கடை அமைத்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே உழவர் சந்தை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள காய்கறி கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்தப்பகுதியில் காலை வேளையில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.