கம்பி வேலியை சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கம்பி வேலியை சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப்பகுதியில் சேதமடைந்துள்ள கம்பி வேலிவழியாக ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவதாகவும் எனவே கம்பி வேலியை சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. அணைக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
அவற்றை பார்வையிடவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்தது. அதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
சேதமடைந்த கம்பி வேலி
ஆனால் அணையின் நீர்வரத்து ஏற்படாததால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையில் நீர் இருப்பும் வேகமாக உயர்ந்து வந்ததால் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற பருவமழையால் அணையின் நீர் இருப்பு 55 அடியை நெருங்கி வருகிறது. இந்த சூழலில் அணைப்பகுதியில் அமைக்கப்பட்ட சேதமடைந்த கம்பிவேலி வழியாக சுற்றுலா பயணிகள் அணைக்குள் சென்று வருகின்றனர்.
சேதப்படுத்தினர்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
திருமூர்த்தி அணைப்பகுதியில் எதிர்பாராமல் நிகழ்ந்து வந்த உயிரிழப்புகளை தடுப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அங்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. அதில் ஒரு சில பகுதிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இந்த நிலையில் விடுமுறை நாட்களில் சேதப்படுத்தப்பட்ட கம்பிவேலி வழியாக சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளித்து வருகின்றனர்.
நீர் இருப்பு அதிகம்
அங்கு உள்ள ஆபத்தை உணராமல் அணையில் இறங்கி குளிப்பது, நீச்சல் அடிப்பது, செல்பி எடுப்பது தண்ணீரில் விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அணையிலும் நீர் இருப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே அணைப்பகுதியில் சேதபடுத்தப்பட்ட கம்பி வேலியை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளை தடுக்க இயலும்.
இவ்வாறு தெரிவித்தனர்.