கோவை
கோவையில் பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை கணபதி காந்திமாநகரை சேர்ந்தவர் பிந்து. என்ஜினீயர். இவருடைய மனைவி ஆதிரா. கடந்த 15.10.2013 அன்று பிந்து, மைசூருக்கு சென்றதால் ஆதிரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அன்று இரவு 9.30 மணியளவில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
உடனே ஆதிரா கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு நின்ற வாலிபர், குடிக்க தண்ணீர் கேட்டார். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த வாலிபர் திடீரென்று கத்தியைக் காட்டி மிரட்டி ஆதிராவிடம் நகையை கேட்டுள்ளார்.
அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், ஆதிராவின் கழுத்தை லேசாக அறுத்து விட்டு 1½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
7 ஆண்டு சிறை
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிராவிடம் நகை பறித்தது தொடர்பாக கோவை மரக்கடையை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது27) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணபிரியா, அரவிந்த்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து அரவிந்த்குமார் கோவைசிறையில் அடைக்கப்பட்டார்.