மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கியது போக்குவரத்து பாதிப்பு
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கியது.;
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் மொடக்குறிச்சி அருகே கேட்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலம் வழியாக அளவுக்கு அதிகமாக உயரம் கொண்ட கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
எனினும் அவ்வப்போது அதிக அளவு உயரம் கொண்ட கனரக வாகனங்கள் சென்று சிக்கி கொள்வது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கேட்புதூர் ரெயில்வே நுழைவு பாலம் வழியாக போர்வெல் லாரி ஒன்று செல்ல முயன்றது. அப்போது அங்கிருந்த இரும்பு கம்பி தடுப்புக்குள் அந்த லாரி வசமாக சிக்கி கொண்டது. இதனால் லாரி முன்னே செல்லவும் முடியாமாலும் பின்னால் வரமுடியாமலும் திணறியது.
இதனால் ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்ற வாகனங்களும், கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த வாகனங்களும் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் மொடக்குறிச்சி வழியாக இயக்கப்பட்டனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரெயில்வே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நுழைவு பாலம் பகுதியில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில்வே மீட்புக்குழுவினர் இரும்பு தடுப்பு கம்பிகளை மதியம் 1.30 மணி அளவில் வெட்டி எடுத்தனர். 7½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து மதியம் 2 அணி அளவில் வழக்கம்போல் கேட்புதூர் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.