கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்-அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவில் நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன், டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக 2021-2022-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 127 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகள் மற்றும் 3 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் காந்தி வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
34 லட்சம் பேர் பயன்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 34 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டிற்கு ஒரு லட்சம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 386 பேருக்கு நடப்பாண்டில் மின் இணைப்பு வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 40 பேருக்கு மின் இணைப்பு வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
தொடர்ந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை திட்டங்கள், பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்கள் உள்பட அனைத்து துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் காந்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா உள்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.