கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது.
கிருஷ்ணகிரி, நவ.9-
பரவலாக மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் காலையில் சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மழை அளவு
மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 753 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 882 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியாக உள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஊத்தங்கரை 21.2, ராயக்கோட்டை 17, போச்சம்பள்ளி 13.8, பாரூர் 12, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி 4, ஓசூர் 2.2, அஞ்செட்டி 5.4, பெனுகொண்டாபுரம் 10, சூளகிரி 5, நெடுங்கல் 9.