உணவுக்காக வாகனங்களை வழிமறிக்கும் சிங்கவால் குரங்குகள்

உணவுக்காக வாகனங்களை வழிமறிக்கும் சிங்கவால் குரங்குகள்

Update: 2021-11-08 15:34 GMT
வால்பாறை

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் சிங்கவால் குரங்குகள் உணவுக்காக வாகனங்களை வழிமறிக்கிறது.

அறியவகை சிங்கவால் குரங்குகள்

வால்பாறை மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமைகள், மான்கள், செந்நாய், கரடி, பாம்பு, பறவைகள், கீரி, வரையாடுகள், சாதாரண குரங்கு, அறியவகை சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக வால்பாறை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமேஅதிகஅளவில் சிங்கவால் குரங்குகள் வசித்து வருகின்றன. சிங்கவால் குரங்குகள் மனிதர்களை பார்த்தாலே மரத்தின் உச்சியில் போய் அமர்ந்து கொள்ளும் உடையது. வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, புதுத்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள சாலையோர வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

வனத்துறை எச்சரிக்கை

இந்த சிங்கவால் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் திண்பண்டங்களை போடக்கூடாது என்று வனத்துறையின் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த சிங்கவால் குரங்குகளை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர். 
நாளடைவில் இந்த சிங்கவால் குரங்குகளுக்கு திண்பண்டங்களை போடத் தொடங்கினர். இதனால் சிங்கவால் குரங்குகள் மரங்களை விட்டு கீழே இறங்கி வந்து திண்பண்டங்களை சாப்பிட்டு பழகத் தொடங்கி விட்டன. இப்போது வாகனங்களில் வரக்கூடியவர்கள் கைகளில் இருந்து திண்பண்டங்களை வாங்கி சாப்பிடும் அளவிற்கு பழகி விட்டது.


உணவு பழக்கம் மாற்றம்

இதனால் சிங்கவால் குரங்குகளின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வனப்பகுதிக்குள் கிடைக்கும் பழங்கள், இலை-தலைகளை சாப்பிடுவதை மறந்து பிஸ்கட், மிக்சர், முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்டவையை சாப்பிட தொடங்கி விட்டன. சுற்றுலா பயணிகள் சிங்கவால் குரங்குகளின் உணவு பழக்கத்தையே மாற்றி விட்டனர். இவைகளை கட்டுப்படுத்த வனத்துறையின் சார்பிலும், இயற்கை வனவள பாதுகாப்பு அமைப்பின் சார்பிலும் சிறப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தி கண்காணித்து வந்த போதும் சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ந்து சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பொருட்களை போட்டு பழக்கி விட்டனர்.

வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு

இதனால் தற்போது சிங்கவால் குரங்குகள் சாலையில் வாகனங்களை வழிமறித்து திண்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டது. இதன்காரணமாக சிங்கவால் குரங்குகள் ஒருசில நேரங்களில் வாகனங்களில் சிக்கி இறந்து வருகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சிங்கவால் குரங்குகள் காலை முதல் இரவு வரை சாலை ஒரத்திலேயே அமர்ந்து கொண்டு உணவுக்காக காத்திருக்கிறது. 
எனவே இனிவரும் நாட்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவமும் ஒத்துழைப்பும் கொடுத்து குரங்குகளுக்கு திண்பண்டங்களை போட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்