தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-11-08 15:29 GMT
புதிய மின்கம்பம் வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த விளந்திடசமுத்திரம் பகுதி சேந்தங்குடி பிள்ளையார் கோவில் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதுமட்டுமின்றி மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பதை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொதுமக்கள், சீர்காழி.
நோய் தொற்று பரவும் அபாயம்
நாகை மாவட்டம் டாட்டா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கி சாக்கடையாய் மாறி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-சிவக்குமார், நாகை.
சுகாதார சீர்கேடு
திருவாரூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், காந்தி நகர், கதவிலக்கம் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும்  வெளியேறும் கழிவுநீரால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்ைகயாகும்.
-பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்