கணவரை சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் பெண் கண்ணீர்
கணவரை சேர்த்து வைக்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு கைக்குழந்தையுடன் தீக்குளிக்க மண்எண்ணெயுடன் வந்த பெண் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.;
திண்டுக்கல்:
கைக்குழந்தையுடன் பெண்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்தார். மேலும் அவர் 2 பைகளை வைத்திருந்தார். அதை பார்த்த போலீசார், அந்த பெண் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை செய்தனர்.
அதில் ஒரு பாட்டில் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டி ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் கண்ணீர் மல்க அந்த பெண் கூறுகையில், எனது பெயர் நந்தினி (வயது 23). திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள ஆர்.வி.எஸ்.நகரில் வசிக்கிறேன். நானும் வையம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது கணவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதுவரை அவர் திரும்பி வரவில்லை. எனது கணவரை அவருடைய பெற்றோர் மறைத்து வைத்து இருக்கின்றனர்.
எனவே எனது கணவரை மீட்டு சேர்த்து வைக்க வேண்டும், என்றார். இதையடுத்து அவரை மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.
மேலும் 2 சம்பவங்கள்
இதற்கிடையே மனு கொடுக்க வந்த மற்றொரு பெண், திடீரென தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்றார். போலீசார் துரிதமாக செயல்பட்டு மண்எண்ணெயை பறித்தனர்.
விசாரணையில் அவர், ஏ.வெள்ளோடு அருகே உள்ள கல்லுபட்டியை சேர்ந்த ஸ்டெல்லாராணி (36) என்பது தெரியவந்தது. மேலும் பூர்வீக நிலத்தில் தனக்கு சேர வேண்டிய பாகத்தை உறவினர் தராததால் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். பின்னர் அவருக்கு போலீசார் அ றிவுரை கூறி, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வயதான தம்பதி உள்பட 3 பேர், மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தனர். அந்த 3 பேரையும் போலீசார் தடுத்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள், புதுகாமன்பட்டியை சேர்ந்த மூக்கன் (63), அவருடைய மனைவி பொன்னுத்தாய் மற்றும் பேத்தி என்பது தெரியவந்தது.
மேலும் நில பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்த போது விரக்தியில் தீக்குளிக்க மண்எண்ணெயை எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து மண்எண்ணெயுடன் வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.