ஊத்துக்கோட்டை மேம்பால இடது புற சாலை மீண்டும் சேதம்
ஊத்துக்கோட்டை மேம்பால இடது புறத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செம்மண் சாலை சேதம் அடைந்தது. நேற்று மதியம் 12 மணி முதல் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே பஸ், லாரி போன்ற கனரக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி ஆறு அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை மேம்பால இடது புறத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செம்மண் சாலை மீண்டும் சேதம் அடைந்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதியம் 12 மணி முதல் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே பஸ், லாரி போன்ற கனரக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வழியாக கார், ஆட்டோ, டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
கடந்த 1-ந் தேதி இதேபோன்று சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் கனரக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.