மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் கலெக்டர் லலிதா அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2021-11-08 13:12 GMT
மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன மழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடலில் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 4.5 கி.மீட்டர் உயரம் வரை மேல்காற்று சுழற்சி உள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளது. 
இதுஅடுத்த 45 மணி நேரத்தில் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (புதன்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆற்றில் குளிக்க வேண்டாம்

மேலும், தொடர் கனமழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக்கூடாது. 
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஒருவாரக்காலத்திற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களான உணவு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, எரிவாயு சிலிண்டர், மண்எண்ணெய், பால் பவுடர், மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணி காக்க தேவையான மருத்துவப்பொருட்கள், முகக்கவசம் ஆகியவற்றை முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். 

ஆவணங்கள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் குறித்தான புகார்களை 04364-1077, 04364-222588 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்