சாலைகளில் கால்நடைகளை திரிய விட்ட 6 பேர் மீது வழக்கு
பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரிய விடும் கால்நடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை பகுதியான மேல்நல்லாத்தூர் மற்றும் திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான திருப்பாச்சூர் நெடுஞ்சாலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் சாலையில் படுத்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் அந்த கால்நடைகளின் உரிமையாளர்களான மேல்நல்லாத்தூரை சேர்ந்த திலகவதி (வயது 48), கற்பகம் (50) கோவிந்தன் (32), திருப்பாச்சூர் ரீட்டா (32), புதிய திருப்பாச்சூரை சேர்ந்த பிரபாகரன் (42), கோமதி (40) ஆகியோர் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக கால்நடைகளை நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் திரிய விடும் கால்நடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.