சென்னையில் கன மழைக்கு 3 பேர் பலி

சென்னையில் பெய்த கன மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தும், மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கியும் என 3 பேர் பலியானார்கள்.

Update: 2021-11-08 11:34 GMT
மேற்கூரை இடிந்து விழுந்தது

சென்னை ராயபுரம் ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஆஞ்சநேயர் நகர் 5-வது தெருவில் வசித்து வந்தவர் ராஜாராம் (வயது 55). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி, 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார்கள். மகன் மட்டும் இவருடன் வசித்து வந்தார்.அந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என்பதால் முதல் மாடியில் பல இடங்களில் கீறலும், உடைந்தும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜாராம் மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நள்ளிரவில் திடீரென அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய ராஜாராம், பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஐகோர்ட்டு, தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதி தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணிநேரம் போராடி கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய ராஜாராம் உடலை மீட்டனர். காசிமேடு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியது

சென்னை கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி ரூபாவதி (54). இவர், நேற்று காலை வீட்டில் தண்ணீர் தீர்ந்துபோனதால் மோட்டார் ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தார்.

‘சுவிட்ச் போர்டில்’ மழைநீர் வடிந்து இருந்ததால் அதில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் மோட்டார் ‘சுவிட்ச்சை’ தொட்டதும் ரூபாவதியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரூபாவதி, பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மின்னல் தாக்கி மீனவர் பலி

சென்னை அம்பத்தூர், எம்.கே.பி. நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (39). மீனவரான இவர், நேற்று அதிகாலையில் அம்பத்தூர் ஏரியில் கமலக்கண்ணன் என்பவருடன் தெர்மாகோல் படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் ஸ்ரீதரை மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர், ஏரியில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய ஸ்ரீதர் உடலை மீட்டனர்.

இதுபற்றி அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான ஸ்ரீதருக்கு புவனேஸ்வரி (27) என்ற மனைவியும், துளசி பிரியா (9) என்ற மகளும், ஹேமநாதன் (5) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்