வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இரவு நேர பஸ்களை ரத்து செய்ததால் பொதுமக்கள் அவதி
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இரவு நேர டவுன்பஸ்களை ரத்து செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மீண்டும் பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இரவு நேர டவுன்பஸ்களை ரத்து செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மீண்டும் பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்கள் ரத்து
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக வாணியம்பாடி, நாராயணபுரம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளுக்கு செல்லும் இரவு நேர பஸ்களும், ஆலங்காயம், பறவக்குட்டை, மலைரெட்டியூர் செல்லும் பஸ்களும் இரவு நேரத்தில் அதிகாரிகள் முறையாக இயக்கவில்லை.
கொரோனா காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி இயக்கப்படும் பஸ்கள் இரவு நேரங்களில் 9 மணிக்கு மேல் வாணியம்பாடி, திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று சம்பந்தப்பட்ட கிராமத்திலேயே இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் காலையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்பட்டது. இரவு நேர ஓசூர், சென்னை பஸ்களையும் காலையில் இயக்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
மீண்டும் இயக்க வேண்டும்
ஆனால் டிரைவர் வரவில்லை, கண்டக்டர் இல்லை என்று காரணம் காட்டியும், பெண்கள் மட்டுமே பயணிப்பதால் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை எனக்காரணம் காட்டி இந்த பஸ்களை திடீரென முன்னறிவிப்பின்றி நிறுத்தி விடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் நீண்ட நேரமாக பஸ்நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்டோ, வேன் உள்ளிட்டவைகளில் வீடுகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே இரவு நேரங்களில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.