நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
எடப்பாடி, நவ.8-
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக, நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தொடர் மழை
எடப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் நெல், பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நடவு முடிந்து நன்கு வளர்ந்துள்ளன.
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, புதினா உள்பட பல பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
விவசாயிகள் கவலை
இதன் காரணமாக பூலாம்பட்டி, கூடகல், குப்பனூர், நெடுங்குளம், சித்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகிய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் வருவாய்துறையினர் பயிர் சேத மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பிடு வழங்குமாறு எடப்பாடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.