தந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு தற்கொலை

தந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு தற்கொலை

Update: 2021-11-08 05:21 GMT
சேலம், நவ.8-
தந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட நர்சு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த போது இடைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
நர்சு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி மெயின்ரோடு சினிமா தோட்டம் பகுதியை சேர்ந்த பகத்சிங் மனைவி சசிகலா (வயது 41). இவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில்நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் சசிகலாவை வீராணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் வந்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வாய்பேட்டை ராமசாமி தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சசிகலா வந்துள்ளார். அங்கு கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சசிகலா, தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொடுத்திருந்ததாகவும், அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பெண் அவரிடம் திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்