தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-08 05:21 GMT
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிப்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று நேற்று ‘தினத்தந்தி’யின் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்கப்பட்டது. நீண்ட நாள் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
-ஊர்மக்கள், காளிப்பட்டி, நாமக்கல்.
சாலையை புதுப்பிக்க வேண்டும்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 7-வது வார்டில் ரெயில் நிலையம் மற்றும் ஓலப்பாடி, ஒட்டப்பட்டி, தளவாய்ப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஆரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. மேலும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-கா.முரளி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி எம்.வேட்ரப்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே மயானத்துக்கு சாலை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், எம்.வேட்ரப்பட்டி, தர்மபுரி.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ்.பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி செல்லும் பிரதான சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோ.ரகுநாதன், மேட்டூர், சேலம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கும், அதன் அருகில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கும் இடையே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.எனவே சாலையில் செல்லும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சரி செய்யவேண்டும்.
-அருள்குமார், வெண்ணந்தூர், நாமக்கல்.

சேலம் மாவட்டம் பி.நாட்டாமங்கலம் 9-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் தெருவில் தேங்கி விடுகிறது. மேலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சாலையில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பி.நாட்டமங்கலம், சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் உள்ளன. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. மழைக்காலம் என்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வருவர்களா?.
வி.மோகனசுந்தரம், தாதகாப்பட்டி, சேலம்.

தர்மபுரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக பல்வேறு இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சாலைகள், தெருக்களில் குப்பைகள் குப்பைகள் பரவி கிடப்பதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-முனிராஜ், தர்மபுரி.
அடிப்படை வசதிகள் கிடைக்குமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாணியர் தெரு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. இதனால் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. மேலும் அந்த பகுதியில் மின் கம்பம் மிகவும் பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதே போல பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த பகுதி மக்கள் தவிக்கிறார்கள். எனவே அடிப்படை வசதிகள் அந்த பகுதி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், சூளகிரி, கிருஷ்ணகிரி.

பள்ளி அருகில் காய்கறி கழிவுகள் (படம் உண்டு)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை சாலையில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் அருகில் காய்கறி கழிவுகள் தினமும் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் காய்கறிகள் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் காய்கறி கழிவுகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிராஜ், சூளகிரி, கிருஷ்ணகிரி.
=====

மேலும் செய்திகள்