மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு பெண் கைது
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு பெண் கைது
பேட்டை:
நெல்லையை அடுத்த பழவூரை சேர்ந்தவர் பூர்ணத்தம்மாள் (வயது 85). இவரது கணவர் இசக்கிமுத்து இறந்து விட்டார். பூர்ணத்தம்மாள் முதியோர் உதவி தொகையை பட்டன்கல்லூரில் இருந்து பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இளம்பெண் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியையும், மஞ்சள் பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கெட் திரேசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பட்டன் கல்லூரை சேர்ந்த செந்தில் முருகன் மனைவி மகராசி (35) என்பவர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியையும், ஆயிரம் ரூபாயையும் போலீசார் மீட்டனர்.