பெங்களூரு மேற்கு மண்டலத்தில் 180 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
பெங்களூரு மேற்கு மண்டலத்தில் வசிக்கும் 180 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். குற்றங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து ரவுடிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூரு:
ரவுடிகளின் வீடுகளில் சோதனை
பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சஞ்சீவ் எம்.பட்டீல் உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மாகடி ரோடு, கே.பி.அக்ரஹாரா, பேடராயனபுரா, ஜே.ஜே.நகர், காட்டன்பேட்டை, சாம்ராஜ்பேட்டை ஆகிய 6 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிகாலை 5 மணியில் இருந்து காலை 9 மணிவரை ஒரே நாளில் இந்த சோதனையை நடத்தி இருந்தனர். சோதனையின் போது சில ரவுடிகளின் வீடுகளில் இருந்து ஆயுதங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ரவுடிகளை போன்று தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள்.
போலீசார் எச்சரிக்கை
ஒட்டு மொத்தமாக 180 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பின்னர் அந்த ரவுடிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்கள் செய்யும் தொழில், ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்கிறார்களா? தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்களா? பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ நினைக்கும் நபர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குற்றங்களில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், எந்த பாரபட்சமும் பார்க்கப்படாது என்றும் போலீசார் எச்சரித்தனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என்று கூறி ரவுடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
600 போலீசார் சோதனை
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூரு மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பியும் ரவுடிகள் ஆஜராகாமல் இருந்தனர். இதையடுத்து, 6 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் 22 போதைப்பொருட்கள் விற்ற கும்பல் உள்பட 180 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார், இந்த சோதனையில் ஈடுபட்டனர். ரவுடிகள் திருந்தி வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது, என்றார்.