அந்தியூர் அருகே விஷம் குடித்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீத முடிவு
அந்தியூர் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உரக்கடை உரிமையாளர்
அந்தியூர் அருகே உள்ள சென்னிமலைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 39). இவர் அந்தியூரை அடுத்த தோப்பூர் பகுதியில் உரக்கடை நடத்தி வந்தார்.
இவர் தன்னுடைய தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்களுடைய பணத்தை திருப்பி அளிக்கும்படி நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.
சாவு
சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்துபோன செல்லமுத்துவுக்கு சங்கீதா என்ற மனைவியும், மகிலன் என்ற மகனும் நிகாசினி என்ற மகளும் உள்ளனர்.