வடகிழக்கு பருவமழை தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.;
தென்காசி:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் மழை பரவலாக பெய்கிறது. இந்த மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இதனை எதிர்கொள்ளும் விதத்தில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தயார் நிலையில் உள்ளது.
மழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம் ஆகிய 7 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு படை வீரர்கள், கமாண்டோ வீரர்கள், அனைத்து வாகனங்கள், மீட்பு கருவிகள், உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் தயாராக உள்ளதாக தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கவிதா தெரிவித்தார்.