மரம் விழுந்து முதியவர் பலி
திருச்சியில் விடிய, விடிய பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகரில் நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாத நிலையில் இரவு நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை விடிய, விடிய பெய்ததால் பாரதிதாசன் சாலை, சாஸ்திரி சாலை, வில்லியம்ஸ் சாலை, உழவா் சந்தை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
மரம் விழுந்து முதியவர் பலி
இதேபோல ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது.
இந்தநிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பென்சனர் தெருவை சேர்ந்த மகாமுனி (வயது 60) நேற்று காலை தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது வீட்டு அருகில் இருந்த பூவரசமரம் முறிந்து மகாமுனி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாமுனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு இடிந்து மூதாட்டி காயம்
இதேபோல் திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு மார்சிங்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த ரோசிலி (75) என்பவரது வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் காயமடைந்தார்.