பட்டாசு வீசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

பட்டாசு வீசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-11-07 20:03 GMT
அரியலூர்:
அரியலூர் மேலத்தெருவில் இருந்து நேற்று முன்தினம் மாலை இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் மார்க்கெட் தெரு வழியாக சென்றது. ஊர்வலத்தில் வந்தவர்கள் பூக்களைத் தூவியும், பட்டாசு வெடித்தபடியும் சென்றுள்ளனர். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் முகமது அபு என்பவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர்கள் மீது பட்டாசு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட முகமது அபுவை, இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரியலூர் போலீசில் முகமது அபு புகார் செய்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் வழக்குப்பதிவு செய்து விஜி என்ற வெங்கடேஷ், கார்த்திக், செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி அரியலூரை சேர்ந்த சங்கர், உத்தாண்டம், மணி சந்திரன், பாஸ்கர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஊழியரான தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு வழியாக தினமும் சவ ஊர்வலம் செல்கிறது. அப்போது ஊர்வலத்தில் வருபவர்கள் பூ மாலைகளை மின்சார வயர்கள் மீது தூக்கி வீசுவதால் மின் தடை ஏற்படுகிறது. வீதியில் செல்பவர்கள் மீதும் பூக்களை போடுகின்றனர். மிக அதிக சத்தம் எழுப்பும் சரவெடிகள் மற்றும் அணுகுண்டுகளை வெடித்து செல்வதால் இதய பலவீனம் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பட்டாசுகளை விற்பனை செய்யும் தயாரிப்பாளர்களை அழைத்து எச்சரிக்க வேண்டும். மின்கம்பங்களில் பூமாலை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்