36 பவுன் நகைகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர் வீட்டில் உதவுவது போல் நடித்து 36 பவுன் நகைளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரேநாளில் நகைகளை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவிடைமருதூர்:
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர் வீட்டில் உதவுவது போல் நடித்து 36 பவுன் நகைளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரேநாளில் நகைகளை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 74). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகள் சங்கீதா தனது தந்தையுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி வீராசாமிக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அன்று இரவே சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 4-ந்தேதி சங்கீதா தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த காசுமாலை, சங்கிலி, தோடு உள்ளிட்ட ரூ.11 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் சங்கீதா புகார் கொடுத்தார். அதன்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வீராசாமி வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு தாமரைச்செல்வி (40) மற்றும் 18 வயது உறவினர் ஒருவர் ஆகியோர் குடியிருந்தனர். கடந்த 30-ந்தேதி வீராசாமி வீட்டிற்கு வந்து அவரது உடல் நலம் குறித்து 2 பேரும் விசாரித்ததும், வீராசாமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல இருப்பதாக இவர்கள் இருவரிடமும் கூறியுள்ளது தெரியவந்தது.
சந்தேகம்
இதனால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் தாமரைச்செல்வி மற்றும் 18 வயது உறவினர் ஆகியோரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். .
இந்தநிலையில் இருவரும் நேற்றுமுன்தினம் செட்டிமண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்களிடம் இருந்த நகைகளை விற்பனை செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
36 பவுன் நகைகள் திருட்டு
வீராசாமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது அவருக்கு உதவுவதுபோல் இருவரும் நடித்து வீட்டை பூட்டுவது போல் கதவை மட்டும் மூடி தாழிட்டு சாவியை சங்கீதாவிடம் கொடுத்ததும், சங்கீதாவும் வீராசாமியும் அங்கிருந்து சென்றதும், பின்னர் 2 பேரும் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 36 பவுன் நகைகளை திருடி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பாராட்டு
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 36 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். ஒரேநாளில் நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.