வைகையில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள்
வைகையில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள் கதி என்ன?
வாடிப்பட்டி,
திருப்பூரை சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வநாதன் (வயது 21) சி.ஏ., படித்து வந்தார். சிவகுமார் மகன் அருண் வசந்த் (18). பிளஸ்- 2 படித்து வந்தார். 2 பேரும் மதுரை பரவையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் குளிப்பதற்காக விளாங்குடியை சேர்ந்த சரவணகுமாருடன் (19) பரவை-துவரிமான் வைகை ஆற்று பாலம் அருகில் கரையோரம் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஸ்வநாதனும் அருண் வசந்தும் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 53 பேர் ஈடுபட்டனர். டிரோன் கேமராவை பயன்படுத்தியும் ஆற்றுப்பகுதி கண்காணிக்கப்பட்டது. ஆனால், 2 மாணவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. நேற்று இரவு 7 மணிவரை தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணியை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது, ஆர்.டி.ஓ. சுகிபிரேமலா, தாசில்தார் சுரேஷ் பிரவிக் ஆலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், கேசவ ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர்.