போலீஸ் நிலையம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பூதப்பாண்டி போலீஸ் நிலையம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி போலீஸ் நிலையம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகார்
பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 68). இவர், அதே பகுதியில் 1992-ம் ஆண்டில் இடம் வாங்கினார். அந்த இடத்தை வேறு ஒருவர் தனக்கு சொந்தம் என்று உரிமை கோரி உள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இது சம்பந்தமான வழக்கு பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மண்ணை தோண்டி எடுத்து, டிராக்டரில் ஏற்றி செல்வதாக பூதப்பாண்டி போலீசில் பத்மாவதி புகார் மனு கொடுத்தார். அதற்கு போலீசார், கோர்ட்டில் வழக்கு இருப்பதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி உள்ளனர்.
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று மீண்டும் பத்மாவதி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் மனு கொடுத்தார். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினார்
திடீரென்று மூதாட்டி தான் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் ஓடி சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவர் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.