வாலிபரை அடித்து கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிய கும்பல்

வாலிபரை அடித்துக்கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2021-11-07 18:57 GMT
சோழவந்தான், 
வாலிபரை அடித்துக்கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணற்றில் பிணம் 
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். 
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பிணத்தை மீட்டனர். அப்போது, அந்த வாலிபரின் உடல் கட்டப்பட்டு இருந்ததுடன், அதனுடன் ஒரு கல்லும் இணைக்கப்பட்டு இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் ரோஷன் குமார் என்ற கோட்டைச்சாமி(வயது 24) என்பது தெரியவந்தது.
விசாரணை
அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானதால், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். கோட்டைச்சாமி கால்களும் கட்டப்பட்டு இருந்தன. அவரது கழுத்திலும், வயிற்றிலும் காயங்கள் இருந்தன. எனவே அவரை அடித்துக்கொன்று, உடலுடன் கல்லை கட்டி மர்ம கும்பல் கிணற்றில் வீசி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
 கோட்டைச்சாமி மீது சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொைல நடந்ததா? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பதை அறிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்