வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் புவனகிரி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவற்றை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி மதகு வழியாக வெள்ளாற்றில் உபரி நீர் திறந்து விடப்படு வதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.5 அடி ஆகும். ஏரியில் 45.30 அடி தண்ணீர் உள்ளது. மேலும் ஏரிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நீரை வெள்ளியங்கால் மற்றும் பூதங்குடி மதகு வழியாக அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். குடிநீருக்காக சென்னைக்கு வினாடிக்கு 61 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
வெள்ளாற்றின் குறுக்கே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின் நீர் மட்ட அளவு 7.5 அடியாகும். தற்போது அணைக்கட்டில் 4.4 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 6 ஆயிரத்து 485 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதை பார்வையிட்ட கலெக்டர், நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து அதற்கு ஏற்றார்போல் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.