பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை அருகே கிராம கண்மாய்க்கு பெரியாறு தண்ணீர் திறக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-07 18:12 GMT
சிவகங்கை,

சிவகங்கை அருகே கிராம கண்மாய்க்கு பெரியாறு தண்ணீர் திறக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே வீரப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இங்குள்ள ஆலங்கண்மாய், கருங்காலி கண்மாய், வலையங்குளம் கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் மூலம் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிபெறுகிறது. 
இந்த கண்மாய்களுக்கு பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் ்கிடைத்து வந்ததாகவும், கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்மாய்க்கு பெரியாற்று தண்ணீர் வரவில்லையாம். இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

இதனால் கிராம கண்மாய்க்கு பெரியாற்று தண்ணீரை திறக்க கோரி வீரப்பட்டியில் கிராம மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கள்ளராதினிபட்டியில் இருந்து சிவகங்கைக்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். விரைந்து பெரியாற்று தண்ணீர் கண்மாய்க்கு திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்