மழை

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு பணிக்காக தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2021-11-07 18:11 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக மீட்பு பணிக்காக 250 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என கோட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
வடகிழக்கு பருவமழை 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக தயார் நிலையில் இருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 250 தீயணைப்பு படை வீரர்களும், 24 வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் எந்த வகையில் நடந்து கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. 
எனினும் பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் பதற்றம் அடைய தேவையில்லை. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கோ அல்லது 112 என்ற அவசர டெலிபோன் எண்ணையோ தொடர்பு கொண்டால் உடனடியாக அவர்களுக்கு தாமதமில்லாமல் உதவி தேடி வரும். 
தயார் நிலை 
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதில் சிக்கியவர்களை மீட்கும் வகையில் தேவைப்படும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.  எனவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் இருந்தால் உடனடியாக அப்பகுதிக்கு தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்த வகையிலும் தாமதம் செய்யாமல் தீயணைப்பு படை வீரர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர். 
மாவட்டத்தில் தீயணைப்பு படையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் கூடுதலாக 15 தீயணைப்பு படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
உள்கட்டமைப்பு வசதி
ஏழாயிரம்பண்ணை மற்றும் இருக்கன்குடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் சேவையில் தீயணைப்பு படையினர் திறம்பட பணியாற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வருகின்றனர். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்