திருக்கோவிலூர் அருகே விபத்தில் பலியான வாலிபர் பிணத்தை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே விபத்தில் பலியான வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பிணத்தை நடுரோட்டில் வைத்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-11-07 17:50 GMT

திருக்கோவிலூர்

வாலிபர் பலி

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் வட்டம் கொடுங்கால் கிராமம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரவிகுமார் (வயது 26). அதே தெருவை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் அருண்குமார்(26). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருதயபுரம் கிராமத்துக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்ல புறப்பட்டனர். இருதயபுரம் லூர்துசாமி என்பவரின் வீட்டு முன்பு வந்தபோது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. 
இதில் படுகாயம் அடைந்த ரவிக்குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். அருண்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

சாலை மறியல்

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விபத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரவிக்குமாரின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். 
இதையடுத்து அவர்கள் விழுப்புரம்-திருக்கோவிலூர் செல்லும் சாலையில் முகையூர் கிராமத்தில் ரவிக்குமாரின் உடலை நடுரோட்டில் வைத்து தங்கள் கிராம மக்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ரவிக்குமார் விபத்தில் சாகவில்லை, அவரது சாவில் மர்மம் உள்ளது என கூறினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியல் செய்த கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராமமக்கள் ரவிக்குமாரின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்