திருக்கோவிலூர் அருகே பரபரப்பு கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருக்கோவிலூர்
பழக்கம்
திருக்கோவிலூர் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மங்கலட்சுமி(வயது 27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கு முன்பு மங்கலட்சுமிக்கு கக்கனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(27) என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு பிறகு மணிகண்டனுடனான பழக்கத்தை நிறுத்திவிட்டார்.
உறவினர் திருமணத்துக்கு
இதற்கிடையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி்யில் கலந்துகொள்வதற்காக மங்கலட்சுமி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மங்கலட்சுமியை சந்தித்து தங்களது பழைய உறவுகள் குறித்து பேசி இருக்கின்றனர். பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது மணிகண்டன் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, பழைய நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. எனவே உனது கணவரை விட்டு பிரிந்து என்னுடன் வா நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என மங்கலட்சுமியிடம் கூறி அவரை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு மங்கலட்சுமி சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கழுத்தை அறுத்தார்
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மங்கலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இதனால் வலி தாங்க முடியாமல் மங்கலட்சுமி கத்தினார். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து மங்கலட்சுமியை மீ்ட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.